தகிக்கிறது நாசி...
பல லட்சம்
கண்ணீர்ப்பிழம்புகள்
ஒன்றிணைந்து
காதைபடைத்தன...
விழி அழுத்ததில்
வீதி நனைந்தது...
விதி சிரித்ததில்
வீதி சந்திசிரித்தது...
விழவிழ எழுந்ததெல்லாம்
அழ அழ அழிந்ததென்றார்...
கலகலவென்றிருந்த பூமி
கல்லறையானதிங்கே...
கண்ணீரின் முகவரியாய்க்
களையிழந்த முகத்தினிடை
செந்நீர் சிந்தியாயின்
தளைபறித்த சிறுகூட்டம்..
செதில்கள்தானெம் சிதிலமென
முட்டிக்கொண்டிருந்தே
வேடிக்கை பார்த்து சுவற்றில்
முட்டிக்கொண்டு
வழியும் விழிகள்...
எல்லாம் தோற்றதென
பொல்லாத வெற்றியொன்று
நெல்விதைந்த மண்ணில்
செல்விதைத்த வஞ்சகத்தில்
சொல்லாத மாந்தர்நிலை
நில்லாத சோகம்கூட
வல்லவன் வகுத்தவிதியில்
அல்லவன் தகித்தபடி - எதிர்த்துச்
செல்லாத பூமியாய் நெஞ்சு
கல்லாகி நின்ற உலகு...
வெள்ளாவி வைத்தவிழி
வெறிகொண்டு வீழ்த்தியதில்..
கல்லாகிக் கனன்ற கவுதமன்
கறியாகிய சொந்த மக்கள்...
பறிதவித்த மக்கள்க்கூட்டம்
பகட்டுச்சிரிப்பு சிரித்தபடி
தறிகெட்ட மனித இனம்..
மக்களாட்சிப்பாதைசொல்லும்
ஜனநாயக நாடுகளும்
புதிய ஜனநாயகப்பாதையென
புதைந்த மானுடம்பில்
பாலூற்றிச் சென்றதுபார்..
ஏழைகளாய்ச்சிதறுண்டு
எல்லாமிழந்த சொந்தம்...
மறுவாழ்வு மனந்தவறி
கல்லாய் எம் கடவுள்.....
இவைதான் விதியெனினும்
கலங்காது விழித்திருப்போம்
துலங்காது என்றும் நீர்மை..
தோற்காது விடுதலைபோரும்...
அடக்குமுறை பலவந்து
ஆட்டிவைத்த போதிலும்
அடங்காத பாதைதனைக்
காட்டிடும் மக்களாட்சி...
துயரின்றி துன்பமின்றி
தூய்மையில் மக்கள்வாழும்
நியதிதான் மக்களாட்சி
வாய்மைதான் நீதியாட்சி...
துள்ளித்திரிந்த எம் மக்கள்
அல்லல்பட்டுத் தெறித்து
தத்தம் சொந்த மண்ணில்கூட
அநாதைகளாகிப்போனபின்னும்
கல்லடிபட்ட நெஞ்சு
குமுறிப்போய் கதறுதுபார்.....
அதன் மூலவார்த்தையாய்
ஈழம் பிறக்கும் - அதைக்
காலம் சுரக்கும் - பின்னர்
ஞாலம் சிறக்குமென்றே..............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக