வியாழன், 12 நவம்பர், 2009

புதைமணல்...



இது என் சொந்த வீடாக இருந்தது...
இப்பொழுதும் அப்படித்தான்..
ஆனால்
சுவைக்க சொந்தங்கள்தான்
எவருமில்லை....

இந்த விட்டத்தில்
தொங்கும் கயிற்றில்
தூரியாடி விழுந்திருக்கிறேன் நான்...
இன்றும்தான்... - ஆனால்
வாறியணைத்து வசந்தம்பாட
பாரிய மனிதரில்லை...

இதோ இந்த மூலையில்தான்
நின்றுகொண்டு பலமுறை
அடம்பிடித்து அழுதிருக்கிறேன்...
இப்பொழுதும் அழுதுகொண்டிருக்கிறேன்..
அன்று என் கண்ணீரைத்
துடைக்க சில கரங்கள் இருந்தன..
இன்று என் விசும்பலைத்
துடைக்க காற்றைக்கூட  காணவில்லை...

இங்குதான்
குடிசைப்பொத்தலில்
விழுமழை ரசித்திருந்தோம்...
நிலவுக்கூரைகூட
நிம்மதி தந்தது....
நிலவு இருக்கிறது இன்றும்..
நிம்மதிதான் காலாவதியானது...

இதோ இந்த
கரிசல் மண் சகதியில்
பலமுறை விழுந்து புரண்டு
விளையாடியிருக்கிறேன்...
இப்பொழுதும் புரள்கிறேன்...
நட்புவட்டம் களிக்கும்
கருப்புநிறச் சகதி அது..
நட்பிற்கு நேரமற்ற
செந்நீர்ச்சகதி இது...

தண்ணீருக்கு பதில்
செந்நீர் உறிஞ்சியதில்
செம்மண்ணாகிவிட்டிருக்கிறது
இந்த கரிசல்...

புத்தத்தில் தினமும் என்
சித்தம் தொலைத்த இடமிதுதான்...
உலகறியாப் படுகொலைகளை
சத்தமின்றி கண்டுரசித்த
புத்தத்தில் மனிதம்
தொலைந்ததும் இங்குதான்...
இரத்த ஆறுகளின்
குளித்து மகிழ்ந்தது 
இந்தப் போதிமரம்

என்கதை இங்குதான்
தொடங்கியது...
பக்கச்சுவற்றிலேறி
பரணிக்குள் ஒளிந்தகதை...
சொந்தமண்ணில் அகதியாய்
தினந்தோரும் ஒழிந்தகதை...
திக்கற்றுப்போய் சொந்தங்கள்
தரணியெங்கும் ஒளிந்தகதை...

இது வரலாற்றின்
புதைமணல் அன்று...
பல மனிதப்பிணங்களின்
புதைமணல் இன்று....

இது என் சொந்த நாடாக இருந்தது...
இப்பொழுதும் அப்படித்தான்..
ஆனால்
சுவைக்க சொந்தங்கள்தான்
எவருமில்லை....

ஜனநாயகம்

தீப்பிழம்யாய்
தகிக்கிறது நாசி...
பல லட்சம்
கண்ணீர்ப்பிழம்புகள்
ஒன்றிணைந்து
காதைபடைத்தன...

விழி அழுத்ததில்
வீதி நனைந்தது...
விதி சிரித்ததில்
வீதி சந்திசிரித்தது...

விழவிழ எழுந்ததெல்லாம்
அழ அழ அழிந்ததென்றார்...
கலகலவென்றிருந்த பூமி
கல்லறையானதிங்கே...

கண்ணீரின் முகவரியாய்க்
களையிழந்த முகத்தினிடை
செந்நீர் சிந்தியாயின்
தளைபறித்த சிறுகூட்டம்..
செதில்கள்தானெம் சிதிலமென
முட்டிக்கொண்டிருந்தே
வேடிக்கை பார்த்து சுவற்றில்
முட்டிக்கொண்டு
வழியும் விழிகள்...

எல்லாம் தோற்றதென
பொல்லாத வெற்றியொன்று
நெல்விதைந்த மண்ணில்
செல்விதைத்த வஞ்சகத்தில்
சொல்லாத மாந்தர்நிலை
நில்லாத சோகம்கூட
வல்லவன் வகுத்தவிதியில்
அல்லவன் தகித்தபடி - எதிர்த்துச்
செல்லாத பூமியாய் நெஞ்சு
கல்லாகி நின்ற உலகு...

வெள்ளாவி வைத்தவிழி
வெறிகொண்டு வீழ்த்தியதில்..
கல்லாகிக் கனன்ற கவுதமன்
கறியாகிய சொந்த மக்கள்...
பறிதவித்த மக்கள்க்கூட்டம்
பகட்டுச்சிரிப்பு சிரித்தபடி
தறிகெட்ட மனித இனம்..

மக்களாட்சிப்பாதைசொல்லும்
ஜனநாயக நாடுகளும்
புதிய ஜனநாயகப்பாதையென
புதைந்த மானுடம்பில்
பாலூற்றிச் சென்றதுபார்..

ஏழைகளாய்ச்சிதறுண்டு
எல்லாமிழந்த சொந்தம்...
மறுவாழ்வு மனந்தவறி
கல்லாய் எம் கடவுள்.....

இவைதான் விதியெனினும்
கலங்காது விழித்திருப்போம்
துலங்காது என்றும் நீர்மை..
தோற்காது விடுதலைபோரும்...

அடக்குமுறை பலவந்து
ஆட்டிவைத்த போதிலும்
அடங்காத பாதைதனைக்
காட்டிடும் மக்களாட்சி...

துயரின்றி துன்பமின்றி
தூய்மையில் மக்கள்வாழும்
நியதிதான் மக்களாட்சி
வாய்மைதான் நீதியாட்சி...

துள்ளித்திரிந்த எம் மக்கள்
அல்லல்பட்டுத் தெறித்து
தத்தம் சொந்த மண்ணில்கூட
அநாதைகளாகிப்போனபின்னும்
கல்லடிபட்ட நெஞ்சு
குமுறிப்போய் கதறுதுபார்.....

அதன் மூலவார்த்தையாய்
ஈழம் பிறக்கும் - அதைக்
காலம் சுரக்கும் - பின்னர்
ஞாலம் சிறக்குமென்றே..............

செவ்வாய், 10 நவம்பர், 2009

ஈழம் பிறக்கும்....














சூழ்நிலைச் சகதியில்
வீழ்நிலை பெற்றாலும்
வாழ்நிலையற்று
தாழ்நிலை பெற்றாலும்..

வாழும் எந்தன் தேசம்...
தமிழ் வாழ்க வாழ்க வென்றே
தினம் கூவும்...

தோல்வி என்பது ஒருவேளை
வேள்விபடைக்கலாம்...
தோள்வலி தீரக்
கேள்விகள் படைக்கலாம்...

புண்கள் ரணம்மிகு
வலிகள் தரலாம்...
கண்கள் புரையோடிட
விழிகள் பிதுங்கலாம்...

காலம் மருந்தாக
விசம் கொண்டுதரலாம்..
ஞாலம் தோற்றுப்போய்
விசமிகள் மிகலாம்...

எல்லாம் உதிர்ந்தபின்னும்
வீறிட்டு உலகில்
ஒருநாள் மலரும் ஈழம்...
என் கனவு நனவாக
கண்டு எம்மனம்
களிக்கும் களித்துருகி
கண்ணீரில் மகிழும்...

நாளைவருமெனக் கனவில்
இன்றைத் தொலைக்க
நினையாமல் தமிழினம்
திரளும்...

தமிழின ஆர்வலன்,
தமிழின காவலன்
என்ற முகமூடிகிழிக்கும்..
உண்மைத் தமிழினத்தின்
தாயகம் விழிக்கும்...

வல்லமைமிக்க தாயின்
அன்புமிகு கருவறை...
சிறைக்குள்ளிருந்தாலும்
சிறகடிக்கத் துடிக்கும்...

கருவில் நுழைந்த
கண்ணியம் பெற்று புது
உருவில் உருவாகும்
தாகம்...

தொடர்ச்சியான தோல்விகளை
மறந்து விட்டொருநாள்
விரியும் என் தேசம்
விருட்சமாய்...
தமிழருக்கென
ஓர் தேசம்...
அதுதான் எம்
ஈழம் காணும்
புண்ணிய தேசம்....