இப்பொழுதும் அப்படித்தான்..
ஆனால்
சுவைக்க சொந்தங்கள்தான்
எவருமில்லை....
இந்த விட்டத்தில்
தொங்கும் கயிற்றில்
தூரியாடி விழுந்திருக்கிறேன் நான்...
இன்றும்தான்... - ஆனால்
வாறியணைத்து வசந்தம்பாட
பாரிய மனிதரில்லை...
இதோ இந்த மூலையில்தான்
நின்றுகொண்டு பலமுறை
அடம்பிடித்து அழுதிருக்கிறேன்...
இப்பொழுதும் அழுதுகொண்டிருக்கிறேன்..
அன்று என் கண்ணீரைத்
துடைக்க சில கரங்கள் இருந்தன..
இன்று என் விசும்பலைத்
துடைக்க காற்றைக்கூட காணவில்லை...
இங்குதான்
குடிசைப்பொத்தலில்
விழுமழை ரசித்திருந்தோம்...
நிலவுக்கூரைகூட
நிம்மதி தந்தது....
நிலவு இருக்கிறது இன்றும்..
நிம்மதிதான் காலாவதியானது...
இதோ இந்த
கரிசல் மண் சகதியில்
பலமுறை விழுந்து புரண்டு
விளையாடியிருக்கிறேன்...
இப்பொழுதும் புரள்கிறேன்...
நட்புவட்டம் களிக்கும்
கருப்புநிறச் சகதி அது..
நட்பிற்கு நேரமற்ற
செந்நீர்ச்சகதி இது...
தண்ணீருக்கு பதில்
செந்நீர் உறிஞ்சியதில்
செம்மண்ணாகிவிட்டிருக்கிறது
இந்த கரிசல்...
புத்தத்தில் தினமும் என்
சித்தம் தொலைத்த இடமிதுதான்...
உலகறியாப் படுகொலைகளை
சத்தமின்றி கண்டுரசித்த
புத்தத்தில் மனிதம்
தொலைந்ததும் இங்குதான்...
இரத்த ஆறுகளின்
குளித்து மகிழ்ந்தது
இந்தப் போதிமரம்
என்கதை இங்குதான்
தொடங்கியது...
பக்கச்சுவற்றிலேறி
பரணிக்குள் ஒளிந்தகதை...
சொந்தமண்ணில் அகதியாய்
தினந்தோரும் ஒழிந்தகதை...
திக்கற்றுப்போய் சொந்தங்கள்
தரணியெங்கும் ஒளிந்தகதை...
இது வரலாற்றின்
புதைமணல் அன்று...
பல மனிதப்பிணங்களின்
புதைமணல் இன்று....
இது என் சொந்த நாடாக இருந்தது...
இப்பொழுதும் அப்படித்தான்..
ஆனால்
சுவைக்க சொந்தங்கள்தான்
எவருமில்லை....